டெல்லி அரசை கவிழ்த்தால் காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரசாந்த் பூஷன் பேட்டி Prashant Bhushan says people will not forgive the Congress flip the Delhi government
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி தேர்தல் வெற்றியை தொடர்ந்து அங்கு நாங்கள் அரசு அமைத்து உள்ளோம். அரசு அமைக்க நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் எங்களுக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம் என்று அவர்களிடம் ஏற்கனவே சொல்லி விட்டோம். எங்களது மக்கள் அரசை காங்கிரஸ் கவிழ்த்தால், வருகிற தேர்தல்களில் அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
நாங்கள் அரசியல் செய்வதற்காகவோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றவோ கட்சி தொடங்கவில்லை என்று அனைவருக்கும் தெரியும். ஜன லோக்பால் மற்றும் ஊழலற்ற இந்தியாவே எங்களது நோக்கம். ஆனால் தேர்தலில் பெரிய கட்சிகளை எங்களால் தோற்கடிக்க முடியாது என்று அந்த கட்சிகள் கூறி வந்தன. தற்போது டெல்லியில் வெற்றி கண்டு விட்டோம். இனி எங்களது அடுத்த இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் பெரிய கட்சிகளின் செல்வாக்கு வீழ்த்தப்பட்டு உள்ளது. பா.ஜனதா, நேரடியாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் வகுப்புவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லி தேர்தல் முடிவு நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மியை அரசியல் கட்சியாக நாங்கள் கருதவில்லை. இது தற்போதைய நிர்வாக முறைகளில் மாற்றத்தை கொண்டு வரும் ஒரு இயக்கமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் எங்களது கட்சி போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று சொல்ல முடியாது. சிறந்த வேட்பாளர்கள் கிடைக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோம். இதுவரை எங்களது கட்சிக்கு நாடு முழுவதும் 310 மாவட்ட பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன.
5 ஆண்டுகள் ஆட்சி செய்ய நாம் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அவர்கள் பெரிய நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிரான சட்டத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், சட்ட உரிமைகள் சாமானிய மக்களுக்கு கிடைக்கவும் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதே எங்களது கட்சியின் குறிக்கோள். நிர்வாகம், நீதித்துறை, போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாற்றத்தை கொண்டு வர இது சரியான நேரமாக உள்ளது.
இவ்வாறு பிரசாந்த் பூஷன் கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.