Federal Government action to dismiss judge Ganguly பெண் பயிற்சி வக்கீலின் செக்ஸ் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலியை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை Federal Government action to dismiss judge Ganguly
புதுடெல்லி, டிச.30-
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், தற்போதைய மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் கமிஷன் தலைவருமான நீதிபதி ஏ.கே.கங்குலி, டெல்லி ஓட்டல் ஒன்றில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக பயிற்சி பெண் வக்கீல் ஒருவர் கூறிய புகார் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் வெளியிட்ட அறிக்கையில், நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது, எனினும் சம்பவம் நடந்த காலகட்டத்தில் அவர் நீதிபதியாக இல்லை, ஓய்வு பெற்று விட்டார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரத்தின்படி, ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் பல தரப்பிலும் வலுத்து வருகிறது. ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
இதுதொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசு இந்த பிரச்சினையில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியின் சட்ட ஆலோசனையை நாடியது. பயிற்சி பெண் வக்கீலின் செக்ஸ் புகார், மேற்கு வங்காள மாநில அரசிடம் தகவல் தெரிவிக்காமல் கங்குலி பாகிஸ்தான் சென்று வந்தது, மனித உரிமை கமிஷன் தலைவர் பதவி வகித்துக்கொண்டே அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கான பணி ஒன்றை ஏற்றது ஆகிய 3 பிரச்சினைகள் தொடர்பாக அவரது கருத்து கேட்கப்பட்டது. அவர் தனது பதிலை மத்திய அரசுக்கு அளித்து விட்டார்.
அதில் அவர் பெண் பயிற்சி வக்கீல் புகார் குறித்து கங்குலி மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் குறிப்பு ஒன்றை தயார் செய்யும். அந்த குறிப்பு, இந்த வாரம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வைக்கப்படும். மத்திய மந்திரிசபை அதற்கு ஒப்புதல் அளித்தவுடன், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தபிறகு, நீதிபதி கங்குலி மீதான செக்ஸ் புகாரில் ஒட்டுமொத்த சம்பவம் தொடர்பாக புதிய விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி வைக்கும். அதன் பேரில் சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும்.
சுப்ரீம் கோர்ட்டு புதிய விசாரணை நடத்தி, அதில் கங்குலி மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்தால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் சட்டம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒன்றின் தலைவர் அல்லது உறுப்பினரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கி உள்ளது. அதிலும், சம்பந்தப்பட்ட நபரின் தவறான நடத்தை அல்லது தகுதியின்மை தொடர்பாக ஜனாதிபதி கேட்டுக்கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
அதன்படிதான் இப்போது கங்குலிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
...
Federal Government action to dismiss judge Ganguly
0 comments:
Post a Comment