Img முதல்–மந்திரியாக பதவி ஏற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரெயிலில் செல்கிறார் chief minister sworn Metro train goes Kejriwal
புதுடெல்லி, டிச. 27–
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ளார். இதற்கான விழா நாளை காலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல்–மந்திரியாக பதவி ஏற்க உள்ள கெஜ்ரிவால் பாரம்பரிய பழக்கம், மரபுகளை எல்லாம் ஒதுக்கி விட்டு மிக, மிக எளிமையை கடைபிடித்து வருகிறார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு, அரசு பங்களா, அரசு கார் என்று எதுவும் வேண்டாம் என்று அவர் அறிவித்துள்ளார்.
டெல்லி சாலைகளில் செல்லும்போது தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த எளிமையான செயல்பாடுகள் டெல்லி மக்களிடம் மட்டுமின்றி நாடெங்கும் உள்ளவர்களிடம் ஆச்சரியத்தையும், ஆதரவையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், நாளை முதல்–மந்திரியாக பதவி ஏற்பதற்கு மெட்ரோ ரெயிலில் செல்லப் போவதாக கூறியுள்ளார். அவருடன் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உடன் செல்வார்கள் என்று தெரிய வந்தள்ளது.
இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:–
நாளை முதல்–மந்திரியாக பதவி ஏற்க நான் ராம்லீலா மைதானத்துக்கு மெட்ரோ ரெயிலில் செல்லலாம் என்று திட்டமிட்டுள்ளேன். டெல்லியில் மேல் இருந்து கீழ் வரை எல்லா மட்டத்திலும் நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது. அவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும்.
உள்ளூரில் உள்ள சிறு, சிறு பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாததால்தான் ஒவ்வொன்றுக்கும் மக்கள் முதல்–மந்திரியை தேடி வருகிறார்கள். மக்கள் தங்கள் பிரச்சினை தீர்க்கக் கோரி மிகப்பெரிய எதிர் பார்ப்புகளுடன் வருகிறார்கள்.
இது கவலை அளிக்கும் சூழ்நிலையாக உள்ளது. இந்த நிலையை மாற்ற நாங்கள் கடுமையாக பாடுபட வேண்டும்.
தற்போது மக்கள் முன் உள்ள பிரச்சினைகளில் 90 சதவீத பிரச்சினைகள் உள்ளூர் மட்டத்தில் ஆனது. மக்கள் சபையை ஏற்படுத்தி ஜனதா தர்பார் நடத்தினால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
இதன் மூலம் மக்கள் எங்களை அணுகும்போது மற்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுடன் வருவார்கள். அவர்கள் பிரச்சினைக்காக வர மாட்டார்கள்.
மக்களுக்காக பணியாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. மக்களின் கனவை பூர்த்தி செய்வேன்.
டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள அறையில் உட்கார்ந்து இருக்க நான் விரும்பவில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் பணியாற்ற சாலை யோரங்களில் நடமாடவே விரும்புகிறேன்.
இப்போது மக்கள் என்னை எளிதில் அணுகுகிறார்கள். அது போல நான் முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்ற பிறகும் மக்கள் என்னை எளிதில் சந்திக்கலாம்.
தலைமை செயலகத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் மரபை நாங்கள் உடைத்தெறிவோம். மக்களால்தான் இந்த ஆட்சி நடைபெற உள்ளது.
டெல்லியில் அரசு பங்களாவில் குடியேற நாங்கள் விரும்பவில்லை. நான் டெல்லியில் சிறிய வாடகை வீடு ஒன்று பார்த்து வருகிறேன். வீடு முன்பு மக்களை சந்திப்பதற்கு வசதியான இடமாக அது இருக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை. என்றாலும் மக்கள் பங்களிப்புடன் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முயல்வேன்.
நல்ல நேர்மையான மனிதர்கள் கை கோர்த்தால் முடியாதது ஒன்றுமில்லை. எனது மந்திரிசபை சிறியதாகத்தான் இருக்கும். புதிய மந்திரிகள் யார்– யார்? என்பது நாளைதான் அறிவிக்கப்படும்.
மக்களுக்கு பணியாற்ற விரும்பும் நேர்மையான அதிகாரிகள் கடிதம், இ–மெயில், பேக்ஸ் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்திருந்தேன். அதை ஏற்று பலரும் என்னை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்கள் ஒத்துழைப்புடன் ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுக்க முடியும். டெல்லியில் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் உள்ளனர்.
அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதற்கிடையே டெல்லியில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் கியாசின் விலையில் திடீரென்று ரூ. 4.50உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ கியாஸ் ரூ 56 ஆக அதிகரித்துள்ளது.
இது டெல்லி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கெஜ்ரிவால் இது தொடர்பாக டூவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் முதல்வராக பதவி ஏற்க உள்ள நேரத்தில் வாகன கியாஸ் விலை உயர்த்தப்பட்டு இருப்பது சந்தேகம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
...
0 comments:
Post a Comment