வணக்கம் சென்னை – விமர்சனம்!
by admin
TamilSpy
ஒரு பெண் இயக்குனர் வருகிறார் என்று தெரிந்ததும், இதை ஆரோக்கியமான விஷயமாக கருதி தமிழ்த்திரையுலகம் வரவேற்றது. ஒரு கொள்கை சார்ந்த இயக்கத்திற்கும், கிருத்திகா உதயநிதிக்கும் அதிக தொடர்புகள் இருப்பதனால் இந்த படத்தில் ஏதாவது புரட்சி நடக்குமா? என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கலாம். அத்தனை பேருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து நல்ல இளமை நிறைந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
தேனியிலிருந்து சென்னைக்கு வேலை தேதி வருகிறார் ஹீரோ சிவா. ப்ரியா ஆனந்த் லண்டனிலிருந்து தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக சென்னைக்கு வருகிறார். ப்ரியா ஆனந்த் வாடகைக்கு எடுத்த வீட்டுக்கு சென்றால் அங்கே சிவா இருக்கிறார். இருவரும் இது என் வீடு… இது என் வீடு… என்று மாறி மாறி அடித்துக்கொண்ட பிறகு தான் இருவரையும் அக்ரிமெண்ட் போட்டு நம்பவைத்து, வீட்டு ஓனர் சந்தானம் ஏமாற்றியிருப்பது தெரியவருகிறது. கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் தவிக்கும் இவர்கள், வேறு வழியில்லாததால் ஒன்றாக அதே வீட்டில் தங்க முடிவெடுக்கிறார்கள்.
சின்னக் குழந்தைகள் மாதிரி எப்போதுமே சண்டைகளோடு நகர்கிறது இவர்களது வாழ்க்கை. எலியும், பூனையுமாக இருக்கும் இவர்கள் தன்னை அறியாமல் ஒருவரை ஒருவர் காதலிப்பது தெரியவருகிறது. ஆனால் ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார் ப்ரியா அனந்த்.
வழக்கமான அமெரிக்க மாப்பிளை மாதிரி தக தக-வென வெள்ளைத் தோலுடன், கோர்ட் சூட்டில் வருங்கால கணவர் சென்னைக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்க அதிர்ந்துபோகிறார் ப்ரியா ஆன்ந்த். தன் காதலிக்கு கணவனாக வரப்போகிறவனைப் பார்த்த அதிர்ச்சி சிவாவுக்கும் ஏற்படுகிறது. லண்டன் மாப்பிள்ளையை ஓரங்கட்டி சிவா-ப்ரியா ஆனந்தை சேர்த்துவைக்க சந்தானம் செய்யும ஐடியாக்கள் காமெடி தர்பார்களாக தியேட்டரில் வெடிக்க, சந்தானத்தின் ஐடியாக்கள் பலித்ததா? சிவாவும் ப்ரியா ஆனந்தும் ஒன்றுசேர்ந்தார்களா என்பதே க்ளமாக்ஸ்.
சில படங்கள் ஹிட் ஆனதும் ஹீரோக்களிடம் சில மாற்றம் தெரியும் என்று சொல்லுவார்கள். ஆனால் சிவா முதல் படத்தில் எப்படி நடித்தாரோ அப்படியே தான் இன்றும் நடிக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் அடுத்து வரவிருக்கும் படங்களில் இதே பாணியில் நடித்தால் கஷ்டம் தான். இந்த கேரக்டரை வேறு சில இளம் ஹீரோக்களுக்கு கொடுத்திருந்தால் அல்வா மாதிரி சாப்பிட்டிருப்பார்கள். யூத்ஃபுல்லான கதையில் வழக்கமான நடிப்பை வெளிப்ப்டுத்தி சொதப்பியிருக்கிறார் சிவா.
சந்தானத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு புதிதாக ஏதும் இல்லை. மரு வைத்தால் மாறுவேஷம் என்பது போல வசனத்தையும், சூழ்நிலையையும் மாற்றினால் புதிய காமெடியாகிகிவிடுமா என்ன?
காற்று வாங்க எழுந்து போகலாம் என நினைக்கும் போது இழுத்து வந்து அமரவைப்பது அனிருத்தின் இசை தான். ஆங்காங்கே வரும் பாடல்கள் காதுகளுக்கு இதமாக இருந்தாலும் கண்களுக்கு விருந்தாக அமையவில்லை. (முதல் படமாச்சே என சமாதானப் படுத்திக்கொள்வோம்)
எப்ப சார் லைட்ட போட்டு வீட்டுக்கு அனுப்புவீங்க என்று நினத்துக்கொண்டிருக்கும் போது க்ளைமாக்ஸில் உதயநிதி வரும் காட்சிகள் சிரிப்பு சரவெடிகள்.
இந்த படத்தில் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இயக்குனரோட கணவர் தயாரிப்பாளர் என்பதால் ஏகத்தும் பணத்தை வாரி இரைக்காமல், ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
வணக்கம் சென்னை – ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடுவது இதுதானோ…!
Show commentsOpen link
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.