பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மகா கர்ஜனை பேரணி 22-ந்தேதி மும்பையில் நடக்கிறது. இந்த பேரணியில் அதிக அளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை திரட்டுவதற்காக மும்பை பா.ஜனதா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பா.ஜனதா சமூக ஊடக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சமூக வலைதளங்கள், செல்போன் போன்ற தகவல் தொழில் நுட்பம் மூலமாக இளைஞர்களிடையே பிரசாரம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நரேந்திர மோடியின் கூட்டத்திற்கு வருகை தர மும்பையில் வாழும் ஒவ்வொரு தனி நபருக்கும் செல்போன் மூலமாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த குழு மகா கர்ஜனை பேரணியில் கலந்து கொள்ள இதுவரை 1 கோடி இளைஞர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அழைப்பு விடுத்துள்ளது. அதே போல் இ.மெயில் மூலமாக 2 கோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பா.ஜனதா வெளியிட்டுள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து பதிவு செய்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் மிஸ்டு கால் கொடுத்து பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் 37 ஆயிரம் பேர் இணையதளத்தில் பேரணியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற சமூக வலை தளமான பேஸ் புக்கில் 19 வீடியோ காட்சிகள் இந்த பேரணியில் இளைஞர்கள் பங்குபெற அழைப்பு விடுக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப், டிவிட்டர், யூ டியூப் போன்றவற்றிலும் 360 வீடியோ காட்சிகள் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த தகவல் பா.ஜனதா சமூக ஊடக குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.